பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா ஒப்படைத்தது போல, பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயங்கரவாதம் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்று கூறிய இந்திய தூதர், சவாலை எதிர்கொள்ளும் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
அண்மைய பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் பேசிய சிங், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளைக் குற்றம் சாட்டினார்.
மேலும், 2008 மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜாகியுர் ரெஹ்மான் லக்வி போன்ற உயர்மட்ட பயங்கரவாதிகளை இஸ்லாமாபாத் பாதுகாத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
பல யூதர்களும் உயிரிழந்த மும்பை தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதிகள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் “இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்றும் “முடிவடையவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலிய தொலைக்காட்சி சேவைாயன i24 உடன் திங்களன்று (19) பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.