மக்கள் மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம், என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில்> நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு வேண்டுகொள் விடுத்துள்ளார்.
இச்சந்திப்பின் போது இலங்கையின் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் குறிப்பாக வடக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடந்த கால அரசுகள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்ததாகவும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊழல், மோசடி மற்றும் இனவாதம் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், எந்த வடிவத்திலும் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
மேலும்” மக்களை மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேவேளை கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடாவின் முழு ஆதரவை வழங்குவதாகக் தெரிவித்திருந்ததோடு, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய மக்கள் சக்தி பெற்ற வலுவான மக்கள் ஆணை குறித்தும் பாராட்டினார்.
அத்துடன் புதிய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.