2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (26) மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று சீசனின் குவாலிஃபையர் 1க்கு பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி முன்னேறியது.
ஜோஷ் இங்கிலிஸின் 73 ஓட்டங்கள் பிரியான்ஷ் ஆர்யாவின் 62 ஓட்டங்கள் என்பன பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
அதேநேரம், போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சரியாக செயல்படாததால் மும்பை அணி எலிமினேட்டரில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
11 ஆண்டுகளில் PBKS அணி ஐ.பி.எல். அரங்கில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது இதுவே முதல் முறை.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெறுவதற்காக இன்று (27) நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயிண்டஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியின் முடிவுக்காக PBKS அணி காத்திருக்கின்றது.
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுமாறு MI அணியை பணித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றது.
சூர்யகுமார் யாதவ் மாத்திரம் அதிகபடியாக 39 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங் மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய PBKS அணியானது 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 187 எடுத்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஷ் இங்கிலிஸ் தெரிவானார்.