இங்கிலாந்து நகரில் லிவர்பூல் கால்பந்து கழகத்தின் பிரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
53 வயதான கார் சாரதியான பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படவில்லை என்று பொலிஸாரின் ஆரம்ப அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
விபத்தினை அடுத்து சம்பவ இடத்தில் குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்றனர்.
மேலும் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் குழந்தைகள்/சிறுவர்கள் என்றும் அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், தெருவில் வரிசையாக நின்றிருந்த ரசிகர் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்துவதை காண்பிக்கின்றது.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சிலரை முதலில் மோதிய பின்னர் கார் நின்றது.
தொடர்ந்து மக்கள் வாகனத்தை நோக்கி விரைந்து வந்து, அதன் கண்ணாடிகளை உடைத்ததாகவும், சாரதி தொடர்ந்து காரை செலுத்தி பலர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.
கார் நின்றதும், ஆத்திரமடைந்த ரசிகர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு, அதன் ஜன்னல்களை உடைத்தனர், பின்னர், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சாரதியை அவர்கள் அடையவிடாமல் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற ஆண்கள் கால்பந்து அணியான லிவர்பூல் மற்றும் ஊழியர்கள் பிரீமியர் லீக் கிண்ணத்துடன் நகர மையத்தில் திறந்த மேல் பேருந்தில் அணிவகுத்துச் சென்றபோது இலட்சக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் வரிசையாக நின்றபோது இந்த சம்பவம் நடந்தது.