வெசாக் பௌர்ணமி தினத்தின்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு மேலதிகமாக, சட்டவிரோதமாக சந்தேக நபர்கள் சிலர் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனத்தில் கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் 34 இன் முதலாம் பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டு இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது.
இதனையடுத்து ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த்துடன், மேலும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை என தகவல் வெளியாகியிருந்தது.
ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் குறித்த நபரின் நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
விசாரணை நிமித்தம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இன்று (08) விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இன்று காலை (08) குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி பொதுமன்னிப்பினை முறைகேடாக பயன்படுத்தி கடந்த வெசாக் தினத்தில் சில சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது.