அரசாங்கம் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதிகள் மூலம் மாத்திரம் சுமார் ரூ.165 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம், 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை திணைக்களம் தாண்டிச் செல்லும் பாதையில் இருப்பதாகக் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருகோட கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வருவாய் இலக்கு ரூ. 2,115 பில்லியன் ஆகும்.
2024 ஆம் ஆண்டில், எங்கள் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது.
அதை நாங்கள் ரூ. 1,535 பில்லியனை ஈட்டுவதன் மூலம் தாண்டிவிட்டோம்.
இந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் ஏற்கனவே ரூ. 900 பில்லியனை வருவாய் ஈட்டியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
2025 பெப்ரவரி 1 முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது.
அதன் பின்னர், சுமார் 14,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது சுங்க வருவாயில் சுமார் ரூ. 165 பில்லியனை பங்களிக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 450 பில்லியனை வருவாய் ஈட்டும் என்று திணைக்களம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கம் இலங்கைக்குள் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை கப்பல் போக்குவரத்து தாமதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.