வவுனியா மாநகர சபைக்குட்பட்ட குடியிருப்புக்களுக்கான ஆதனவரியை 8 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்பார்ப்பதுடன், குடியிருப்பு தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு 10 சதவீதமாக வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வவுனியா மாநகர சபை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மாநகரத்திற்குட்பட்ட மக்கள் தங்களது முறைப்பாடுகளை இலகுவாக வழங்குவதற்காக வட்சப் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தங்களது பிரச்சனைகளை குறுந்தகவல்கள் மூலமாக அனுப்பினால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் மூன்று மொழிகளிலும் குறித்த சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மக்களுக்கான சிறந்த பொதுவான ஒரு பாதீட்டை இம்முறை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னி அமர்வில் குறித்த ஆதன வரி தொடர்பான விடயங்கள் இறுதி செய்யப்படும் எனவும் வவுனியா மாநகர சபை முதல்வர் சு.காண்டீபன் இதன்போது குறிப்பிட்டார்.