பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ.,(National Investigation Agency) அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் குறித்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமானது.
பஹல்காமின் பட்கோலே பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அஹமது மற்றும் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது ஜோதார் ஆகிய இருவரும் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் 5 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் அடையாளங்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
இவர்களது வாக்குமூலங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் வெளியிடப்பட்ட ஓவியங்கள் ஆகிய ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















