சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கழக அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிகாண் சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் குழூ ஈயில் இடம்பெற்ற முக்கியமான போட்டியொன்றில் இன்டர் மிலான் அணி ரிவர் பலட் அணியை எதிர்கொண்டது. போட்டியில் வெற்றிப்பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் போட்டி ஆரம்பமுதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆரம்பமாகியது.
இந்நிலையில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதனையும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 66வது நிமிடத்தில் ரிவர் பலட் அணி வீரர் விதி மீறலில் ஈடுபட்டமைக்காக சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் 72வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி பிரான்செஸ்கோ பியோ எஸ்போசிடோ இன்டர் மிலான் அணியின் முதல் கோலினை பதிவு செய்து 1-0 என தனது அணியை முன்னிலைப்படுத்தி அசத்தினார். பின்னர் போட்டியில் கோலினை பதிவு செய்ய ரிவர் பலட் அணியும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள இன்டர் மிலான் அணியும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் போட்டியின் நிறைவில் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் இன்டர் மிலான் அணியின் அலெஸ்ஸ்hன்ரோ பஸ்டோனி 2-0 என தனது அணியை முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் எதிரணி மீது விதிமீறலில் ஈடுபட்டமைக்காக ரிவர் பலட் அணியின் மற்றுமொரு வீரரும் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்ட நிலையில் இண்டர் மிலான் அணி 2-0 என வெற்றிக்கொண்டு தகுதிகாண் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது



















