ஐந்து ஆண்டுகளின் பின்னர் பெய்ஜிங்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாயன்று (15) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுக்க முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டுக்காக சீனா சென்றுள்ள ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளில் அண்மைய முன்னேற்றம் குறித்து சீன ஜனாதிபதியுடன் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர்.
இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி குறித்து ஜின்பிங்கிடம் கலந்துரையாடியதாகவும், ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவருக்குத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஜூன் மாதத்தில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
திங்களன்று (14) சீனப் பிரதமர் வாங் யீ உடனான சந்திப்பில் ஜெய்சங்கர், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) பதற்றத்தைக் குறைப்பதில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
2024 ஒக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடந்த ஒரு உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஒக்டோபரில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் கணிசமாக மேம்படத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














