உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (05) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக தாராலி கிராமத்தில் உண்டான பேரழிவு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இடைவிடாத மழைக்கு மத்தியிலும் இந்திய இராணுவம், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இதுவரை 130 பேரை மீட்டுள்ளதாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (06) மீட்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் தெரிவித்தார்.
தாராலி மற்றும் சுகி டாப்பில் ஏற்பட்ட இரண்டு தனித்தனி மேக வெடிப்புகள் அப்பகுதி முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தின.
உத்தரகாஷியில் உள்ள தாராலி மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
சேற்று நீரோட்டங்கள் குடியிருப்புகளை தரைமட்டமாக்கியதுடன், பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 20-25 ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நிலைமை குறித்து உடனுக்குடன் தகவல் பெற பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் உதவியை உறுதியளித்தார்.
இன்று (06) அதிகாலையில், தாமி ஹெலிகொப்டரில் இருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார்.
இதனிடையே, உத்தரகாண்ட் முழுவதும் குறிப்பாக மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனர்த்தம் குறித்து சமூக ஊடகங்களில் வெளடியான காட்சிகள், கடல் மட்டத்திலிருந்து 8,600 அடி உயரத்தில் அமைந்துள்ள தாராலி நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை வெள்ளம் காவு கொள்வதை காட்டுகின்றது.














