கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள மின்சாரஉபகரணங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று நண்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
கட்டடத்தின் 3 ஆவது மாடியில் உள்ள மின்சார உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
தீவிபத்தினை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் மற்றும் கொழும்ப மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அத்துடன் தீயை கடடுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக விமானப்படை மற்றும் கடற்படையினரின ஒத்துழைப்பினை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சுமார் 12 மணிநேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டது.
தீ விபத்து காரணமாக அருகில் உள்ள பல வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதுடன் தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தின் தரைதளம் உட்பட அனைத்து பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் தீவிபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.















