பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர்.
குவெட்டாவின் சர்குன் வீதியில் அமைந்துள்ள சிறப்பு பொலிஸ் படை (Frontier Constabulary) தலைமையகத்துக்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களின் ஜன்னல்களை உடைத்தது.
குண்டு வெடிப்பினை அடுத்து சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிச் சூடு சத்தமும் அப்பகுதியில் கேட்டது.
இது குடியிருப்பாளர்களிடையே பீதியையும் பயத்தையும் பரப்பியது.
மீட்புக் குழுவினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.
மேலும் தேடுதல் நடவடிக்கைக்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஆஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு பரபரப்பான வீதியில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்ட தருணத்தைக் காட்டும் ஒரு சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர் பக்த் மொஹமட் கக்கரின் கூற்றுப்படி, இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஐந்து பேர் சிகிச்சையின் போது இறந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த 32 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

















