ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பின் போது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு யொஹெய் சசகாவா தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இதன் போது அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் முன்வைத்தார்.
இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும், இலங்கையில் சமூக சேவைக்கான அவரது நீண்டகால அர்ப்பணிப்புக்கும் யொஹெய் சசகாவாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















