ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா’வும் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான மினுர செனரத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மினுர செனரத் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிததுள்ளதாவது” கடந்த 2021ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 17ஆம் திகதி அதிகாலை பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் நாரஹேன்பிட்டிய பார்க் வீதி சாலிக விளையாட்டு மைதானத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானார்.
அவரது மரணம் சந்தேகத்துக்கிடமானது என்பது முதலாவதாக அறிக்கையிடப்பட்டது. இதற்கமைய நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையம் மற்றும் பொரளை குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. தாஜூதீன் மரணம் தொடர்பில் முதலாவது பிரேத பரிசோதனை முறையாக இடம்பெறவில்லை இதனால் சந்தேகம் காணப்படுவதாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரேதம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் அஜித் தென்னக்கோன் தலைமையிலான மூவரங்கிய குழுவினரால் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாஜூதீனின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுது்து குறித்த மரணம் விபத்தால் இடம்பெற்றதல்ல, மனித கொலை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கார் பயணித்த வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளி பதிவுகள் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. சி.சி.டி.வி காணொளிகளை பரிசீலனை செய்கையில் தாஜூதீனின் காரை பின்தொடர்ந்து பிறிதொரு கார் செல்வதை அவதானிக்க முடிந்தது.
குறித்த காரில் பயணித்த நபர் தொடர்பில் தற்போது பல விடயங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. அருண விதானகமகே எனப்படும் ‘கஜ்ஜா என்பவரே குறித்த காரில் சென்றுள்ளார். கஜ்ஜாவின் மனைவி அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாதாள குழுவின் முக்கிய நபராக பெகோ சமன், கஜ்ஜாவுடன் தொடர்பினைப் பேணி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
கஜ்ஜாவுக்கு பல தரப்பில் இருந்து உயிரச்சுறுத்தல் இருந்ததாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட தாஜூதீன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் 13 ஆண்டுகாலமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சாட்சியங்களை அடிப்படையாக கொண்டே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது ” இவ்வாறு பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான மினுர செனரத் தெரிவித்துள்ளார்.














