2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14) மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) நவம்பர் 07 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06.00 மணிக்கு இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது.
அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.
இதற்கிடையில், இன்று இரண்டாவது வாசிப்பின் போது 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் பொதுமக்களுக்கு போதுமான நிவாரணங்களை வழங்காததால், அதற்கு எதிராக வாக்களிப்பதாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.
2026 வரவு செலவுத் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கும் என்பதை எதிர்க்கட்சியின் பிரதான கொறடா கயந்த கருணாதிலகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.















