(HMS Prince of Wales) எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் என்ற இங்கிலாந்தின் முதன்மையான விமானம் தாங்கி கப்பல், ஒரு நெருக்கடி நிலையில் ஐந்து முதல் பத்து நாட்களுக்குள் அணிதிரட்டத் தயாராக உள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) அறிவித்துள்ளார்.
விளாடிமிர் புடினுக்கு எதிராக நேட்டோவின் “கடின சக்தியை” உலகம் முழுவதும் நிரூபித்த பின்னர், இங்கிலாந்தின் முதன்மை விமானம் தாங்கிக் கப்பல் போருக்குத் தயாராக உள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
இருப்பினும், இங்கிலாந்தின் போதுமான போர்க் கப்பல்கள், ஆதரவுக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளை சொந்தமாக வைத்திருக்காததால், இந்தக் கப்பலைத் தனியாகப் பயன்படுத்துவதற்கு நேட்டோவிடமிருந்து துணைக்கப்பல்கள் தேவைப்படும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து எஃப்-35பி ரக போர் விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மத்தியதரைக் கடலில் 24 மணி நேரத்தில் 36 முறை புறப்பட்டுச் சென்றதுடன் இது 1982 ஆம் ஆண்டு (Falklands) ஃபாக்லேண்ட்ஸ் போருக்குப் பின்னர் இங்கிலாந்து விமானம் தாங்கி கப்பலால் நடத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான விமானப் புறப்பாடு ஆகும்.



















