இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளால் இடம்பெறும் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலர் டவுனிங் வீதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வை ஏற்பாடு செய்துள்ளார்.
குறித்த நிகழ்வில் நீதி அமைப்புகளில் உடனடி சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, குறிப்பாக சிறுபான்மை மற்றும் புலம்பெயர்ந்த பெண்களின் குடும்பங்கள், காவல் மற்றும் தண்டனை வழங்குதலில் உள்ள கட்டமைப்புக் குறைபாடுகளை இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாகப் வன்முறை தொடர்பான புகார்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அமைப்புகளின் விழிப்புணர்வு பல முக்கியமான சட்டத் திருத்தங்களுக்காகப் பிரச்சாரம் செய்வதுடன், இதில் பனாஸின் சட்டத்தையும் உள்ளடக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சட்டம், கௌரவத்தின் பெயரால் செய்யப்படும் துஷ்பிரயோகத்தை தண்டனை வழங்கும் போது ஒரு தீவிரமான காரணியாக வெளிப்படையாக அங்கீகரிக்க முயல்கிறது.
இதேவேளை, வன்முறைகளால் பெண்கள் தூண்டப்பட்டு செய்துகொள்ளும் தற்கொலைகளுக்கும் கொலைக்குச் சமமான தண்டனைகளை விதிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வில் ஈடுபட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் புலம்பெயர்வினை கருத்திற்கொள்ளாது அனைத்து பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு அணுகலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோருகின்றனர்.
இவ்வாறான நிலைகள் பெண்களைப் பாதுகாப்பதில் சுமார் இருபது ஆண்டுகளாக மிகக் குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.














