பாதகமான வானிலை காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்தில் சுமார் 25%–30% பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார்.
இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், மின்சாரத்தை மீட்டெடுப்பது கடினமான பணியாக மாறியுள்ளது என்றும், கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களே மின் தடையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ரந்தெனிகல, ரந்தம்பே மற்றும் மஹியங்கனையை இணைக்கும் 132,000 கிலோவோட் திறன் கொண்ட ஒரு முக்கிய மின்மாற்றி இணைப்பு உடைந்து தற்போது பழுதுபார்ப்புக்கு அணுக முடியாத நிலையில் உள்ளது.
இதன் விளைவாக, கொத்மலை மற்றும் ரந்தம்பே நீர் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பல மின்மாற்றப் பாதைகளில் உள்ள கோபுரங்கள் சேதமடைந்துள்ளன அல்லது நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் வெள்ள நீர் வடியத் தொடங்கும் வரை பழுதுபார்ப்பு சாத்தியமற்றது.
நீர் கசிவு மற்றும் சேற்று நீர் வரத்து காரணமாக போவதென்ன மற்றும் மேல் கொத்மலை மின் நிலையங்கள் மேலதிக மூடல்களில் அடங்கும்.
தற்போது, கொத்மலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் இரண்டு மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
ஏனைய நிலையங்கள் அதிகபட்ச திறனில் இயங்குகின்றன.
இருப்பினும், துணை மின் நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் கண்டி நகரம் உட்பட பரவலான பகுதிகளில் மின் தடைகள் தொடர்கின்றன.
பொது பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் சேதமடைவதைத் தடுக்க சில மின் இணைப்புகள் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வீட்டு இணைப்புகள் பின்னர் கருத்திற் கொள்ளப்படும்.
மின் தடையினால் சுமார் 7 மில்லியன் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீர் மட்டம் குறைந்த பின்னரே பழுதுபார்ப்பு தொடர முடியும் என்றும் குறிப்பிட்டார்.














