மாற்றியமைக்கப்பட்ட கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தடங்கலின்றிப் பரீட்சைக்குத் தயாராவதற்காக மாணவர்களுக்கு, ஈ-தக்சலாவ (E-Thaksalawa) இலத்திரனியல் தளங்களை அணுகுவதற்கான வசதியினை கல்வி அமைச்சு வழங்குகிறது.
நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதற்கு விரைவாகப் பதிலளிக்கும் வகையில், ‘திட்வா’ சூறாவளிக்குப் பிந்தைய கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடத்தப்படுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த எதிர்பாராத அனர்த்த சூழ்நிலையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி அமைச்சு தொடர்ச்சியான கல்வி ஆதரவை வழங்குவதற்காகச் செயற்பாட்டு ரீதியாக இலத்திரனியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.
தேசிய இ-கற்றல் தளமான ஈ-தக்சலாவிற்கான (E-Thaksalawa) அணுகலை மேம்படுத்துவதன் மூலம், மாணவர்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் பாட உள்ளடக்கங்கள் மற்றும் கடந்தகால வினாத்தாள்களைப் பெற இது வழிவகுக்கிறது.
பாடசாலை மூடப்படுதல் மற்றும் வெளிப்புற நெருக்கடிகள் எவ்வாறாக இருப்பினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தடங்கலின்றித் தயாராவதை இந்த முயற்சி உறுதி செய்யும்.
கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதமரின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணி ஆகியன இணைந்து மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க கூட்டு முயற்சிகள் மூலமாகவே கல்வி ஆதரவை இலத்திரனியல் மயமாக்கும் விரைவான நடவடிக்கை சாத்தியமாகி இருக்கின்றது.
இவர்களின் துரித ஒருங்கிணைப்பு, அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்கள் ஒழுங்கமைக்கப்படுதல், பதிவேற்றம் செய்தல் ஆகியன மாணவர்கள் இதனை அணுகுவதற்கு வழி வகுத்திருக்கின்றது.
எதிர்காலத்தில், கல்வி பொது தராதர சாதாரண தர (O/L) மாணவர்களுக்காகவும், 2026 பெப்ரவரி மாதம் முதல் இதேபோன்ற இலத்திரனியல் கற்றல் வள வசதி பெற்றுக் கொடுக்கப்படும்.
இது எதிர்பாராத சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றலைக் கொண்ட இலங்கையின் கல்வி முறைமையில், வலுவான, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கல்வி முறைமையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இதேவேளை, அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலதிக பாடசாலைச் சீருடைகளை வழங்கும் திட்டத்தின் கீழ் சீருடை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ள நிலையில், சீருடை இல்லாத மாணவர்களுக்கு பொருத்தமான உடையில் பாடசாலைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 5 இலட்சம் பாடசாலை மாணவர்களில் சுமார் 50 வீதமானோருக்கு சீருடைக்கான தேவை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன்படி பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுமார் இரண்டரை இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு
மாகாண மட்டத்தில் இந்த மேலதிகச் சீருடைத் தொகுதியை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் அமைச்சு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் உரிய ஊழியர்களின் உடை விடயத்திலும் நெகிழ்வான கொள்கையைப் பின்பற்ற தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

















