அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, சமூக அபிவிருத்தி குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு எந்தவொரு சட்டரீதியான அறிவித்தலும் வழங்கப்படவில்லை என இலங்கை கிராம அலுவலர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் அனர்த்தங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது கிராம அலுவலர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவதாக இலங்கை கிராம அலுவலர்கள் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தச் சமூக அபிவிருத்தி குழு, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான விடயங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
சமூக அபிவிருத்தி குழுவுக்கு அனர்த்தங்கள் சம்பந்தமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக
எமக்கு வழங்கப்பட்ட எந்தவொரு சுற்றுநிருபத்திலும் நாங்கள் பார்க்கவில்லை.
வரலாற்றில் ஒருபோதும் அரச உத்தியோகத்தர்களாகிய நாங்கள், அனர்த்தம் ஏற்படும் போது
அது தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் போது அரசியல் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதில்லை.
கிராமத்தில் உள்ள அரசியல்வாதி எமக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
ஆனால், இந்த அனைத்து விடயங்களும் சட்டரீதியாக செய்யப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் தற்போது எமது அதிகாரிகளுக்கு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர்.
சில இடங்களில் பல்வேறு படிவங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் விநியோகிக்கின்றனர்.
கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவர்
அந்தக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும்
25 ஆயிரம் ரூபா வழங்குவதற்கான படிவத்தை வழங்கியுள்ளார்.
அவ்வாறு வழங்க முடியாது அல்லவா?
அவ்வாறு விநியோகிக்கும்போது முறையான தரநிலை இல்லை.
ஜனாதிபதி 25 ஆயிரம் ரூபா சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கச் சொல்கிறார்,
அதற்கு ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு கிராமத்தில் உள்ள அனைவருக்கும், தமது அரசியல் உதவியாளர்களுக்கும் இதனை வழங்க முடியாது.
பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பல்வேறு வட்டார சபைத் தலைவர்கள்
தமது அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை
உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த அழுத்தத்தை நிறுத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.















