வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவு செல்லமுற்பட்ட வேளை போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால் அரச தரப்பால் பயணிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்காக இன்றையதினம் நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு செல்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஒரு தொகுதியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் தயாராகியிருந்தனர்.
இதன்போது அனைவரையும் ஏற்றிச் செல்வதற்காக கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தாரகை படகு வருகைதந்தது.
படகில் மக்கள் ஏறுவதற்கு நீண்ட வரிசைகளில் அரச அலுவலக உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், வைத்தியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் நிவாரணபணிகளை முன்னெடுப்பவர்கள் என பலரும் காத்திருந்தனர்.
ஆனால் கடற்படையினர் 100 நபர்களை மாத்திரமே படகில் ஏற்ற முடியும் என கூறினர்.
அத்துடன் நெடுந்தீவுக்கான குமுதினிப் படகும் பழுதடைந்துள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் குறிப்பிட்டார்.
இதனால் தினசரி வேலைக்குச் செல்லும் பல அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் படகில் செல்லமுடியாது புறக்கணிக்கப்பட்டனர்.
மக்கள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும் தனது பயணத்தை இரத்து செய்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பாக தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையில் எவ்வித ஆக்கபூர்வமாக பதிலும் கிடைக்கவில்லை.
இறுதியில் நெடுந்தீவு பிரதேச செயலரின் முயர்ச்சியில் இறந்தவரின் உடலைக்கொண்டு செல்லும் தனியார் படகு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்களைக் கொண்டு செல்ல முயற்சித்தவேளை இறந்த உடலுடன் செல்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் குறித்த பயணமும் இரத்தானது.
இறுதியில் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் படகுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
















