டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட மறுசீரமைப்பு முயற்சிகளால், இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது இந்த ஆண்டின் வேகத்திற்கு இணையாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளை கணிசமாக விஞ்சும் என்றும் அவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியோக செவ்வியில் குறிப்பிட்டார்.
நவம்பர் மாத இறுதியில் நாட்டை தாக்கிய டித்வா புயல், சுமார் 650 பேரைக் கொன்றதுடன் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 10% பேரைப் பாதித்தது.
இது உள்கட்டமைப்பு, பண்ணைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
2022 ஆம் ஆண்டில் பொருளாதார சரிவிலிருந்து இன்னும் மீண்டு வரும் நாட்டில் மீள்கட்டமைப்பு செலவுகள் 7 பில்லியன் டொலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடு சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்று வருகிறது.
அதே நேரத்தில் 2004 சுனாமிக்குப் பின்னர் அதன் மோசமான இயற்கை பேரழிவைச் சமாளிக்க உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களால் மேலதிக அவசர உதவி உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம், ஆசிய அபிவிருத்தி வங்கி நாட்டிற்கு 200 மில்லியன் டொலர்களையும், உலக வங்கி 120 மில்லியன் டொலர்களையும் வழங்குவதாக உறுதியளித்தன.
இலங்கையின் 200 மில்லியன் டொலர் அவசர நிதிக்கான கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதன்போது கூறினார்.












