இந்நிலையில் குறித்த பாதிப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்கு பிரதேசசபைகள் உடனடியாக கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டங்கள் நேற்று(17.12.2025) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்கில் கட்டாக்காலி கால்நடைகள் வீதிகளில் காணப்படுவதால் போக்குவரத்து இடர்பாடுகள் ஏற்படுவதுடன் வீதிவிபத்துக்களும் ஏற்படுவதாகவும் கிராமமட்டஅமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
அத்தோடு கால்நடைவளர்ப்பாளர்கள் அரச திணைக்களங்களின் பாதுகாப்பு வேலியைச் சேதப்படுத்துவதுடன், அரசதிணைக்கள வளாகங்களை தமது கால்நடைகளின் மேச்சல் தரையாகவும் பயன்டுத்திவருவதாகவும் குறித்தகூட்டத்தில் திணைக்களம் சார்ந்த அதிகாரிகளும், பொதுமக்களும் தெரிவித்தனர்.
குறிப்பாக மல்லாவி சித்தமருத்துவமனை, ஐயங்கன்குளம் பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்புவேலிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் கால்நடைகளுக்கான மேச்சல் தளங்களாக குறித்த இடங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மல்வாவி சித்தமருத்துவமனையில் ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதால் மருத்துவர் உள்ளிட்ட, மருத்துவமனைப் பணியாளர்களும் இணைந்து சேதப்படுத்தப்படும் வேலியைச் சீர்செய்வதுடன், மருத்துவமனை வளாகத்தினையும் துப்பரவுசெய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
வேலிகள்இவ்வாறு சீரமைக்கப்பட்டாலும், வேலிகள் சேதப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக கால்நடைகள் அரச திணைக்கள வளாகங்களுக்குள் விடப்படுவதாகவும் இதன்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
கால்நடைகளுக்கான மேச்சல்தரவைகளை வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் அபகரித்துள்ளனர். மேச்சல்தரவைகள் இன்மையால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இருப்பினும் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்தவேண்டியது பிரதேசசபைகளின் பொறுப்பாகும்.
எனவே பிரதேசசபைகள் தங்களுடைய அதிகாரங்களை முறையாக உபயோகித்து கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும்.
சபைகளுக்குரிய பிரதிநிதிகள் தெரிவிசெய்யப்பட்ட பின்னரான காலப்பகுதிகளில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைகள் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் புதுக்குடியிருப்பில் 60கால்நடைகளும், கரைதுறைப்பற்றில் 87கால்நடைகளும் பிடிக்கப்பட்டு தண்டப்பணங்கள் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேச சபைகளால் இவ்வாறு கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியுமெனில், துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்கு பிரதேசசபைகளால் ஏன் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே தயவுசெய்து மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைத் தவிசாளர்களைக் கேட்டுக்கொளகின்றேன். அவ்வாறு பிரதேசசபைகளால் எடுக்கப்படுகின்ற கடுமையான நடவடிக்கைகளின்மூலம் இந்த கட்டாக்காலி கால்நடைப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்குமாறும் மாந்தைகிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசசபைகளின் தவிசாளர்களிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில் கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தம்மால் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென துணுக்காய் மற்றும் மாந்தைகிழக்கு பிரதேசசபைத் தவிசாளர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














