யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மதியம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் இணைத் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
கூட்ட ஆரம்பத்தில் டித்வா புயல் நிவாரணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பேசிக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறுக்கிட்டார்.
குட்டி நாய் போன்று செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.
இதனையடுத்து இளங்குமரன் எம்பிக்கு ஆதரவாக அர்ச்சுனா இராமநாதன் எம்பி சிறீதரன் எம்பியுடன் கடுந்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
தாமதமாக வந்த கஜேந்திரகுமார் எம்பி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இயங்கி வரும் புற்றுநோய் வைத்தியசாலையை மத்தியிடமோ மாகாணத்திடமோ என வழங்காது தனியான சிறப்பு பிரிவாக இயங்க வைக்க வேண்டும் என கோரினார்.
கஜேந்திரகுமார் அது தொடர்பில் பேசியபோது அருகில் இருந்த அர்ச்சுனா இராமநாதன் மறுத்து பேசினார்.
இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அர்ச்சுனா இராமநாதனும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்திலும் அருகில் இருந்து தொல்லை தருவதாகவும் இங்கு அருகில் இருத்தி உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது சபையில் சிரிப்பொலி எழுந்தது.
















