புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
இன்று காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு , புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து,மல்வத்து விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மல்வத்து மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மல்வத்து மகா விஹாரையின் பிரதிப் பதிவாளர், ராஜகீய பண்டித தர்ஷனபதி வணக்கத்திற்குரிய மகாவெல ரத்தனபால நாயக்க தேரரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டார். பிரித் பாராயணம் செய்த மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
மல்வத்து மகா விஹாரையின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் ஜனாதிபதி சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனை அடுத்து, அஸ்கிரி மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரி மகா விஹாரையின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
உதயமான புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி தெரிவித்த அஸ்கிரி மகாநாயக்க தேரர், மக்களுக்கு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை புத்தாண்டில் புதிய பலத்துடன் செயல்படுத்த வாழ்த்துத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பு அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்து, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் செயல்படுத்திய திட்டம் குறித்து ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு இந்த திட்டத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கு மகாசங்கத்தினர் தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.






















