தெஹிவளையில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக தன்னை தவறாகக் கருதி, பொரளை பொலிஸ் அதிகாரிகள் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக தெரணியகலவைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் தெரணியகலையில் உள்ள ஒரு சிறிய உணவகத்தின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டிசம்பர் 30 ஆம் திகதி கொஹுவலவின் போதியவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்தார்.
சந்தேக நபரைக் கைது செய்யும் முயற்சியில், குற்றவாளியை அடையாளம் காண உதவி கோரி, பொலிஸார் அந்த நபரின் வரைபடத்தை பொதுமக்களுக்கு வெளியிட்டனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர், ஜனவரி 1 ஆம் திகதி தனது தொழிலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கொழும்புக்குச் சென்று, பேஸ்லைன் வீதியில் உள்ள தனது மனைவியின் வீட்டில் தங்கியுள்ளார்.
மறுநாள் காலை பொலிஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வந்ததாகவும், பொரளை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தானாக முன்வந்து அதிகாரிகளுடன் சென்றதாக அந்த நபர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
மேலும் பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் சந்தேக நபரின் ஓவியத்தைக் காட்டி, படத்தில் காட்டப்பட்டுள்ள நபருடனான தனது முக ஒற்றுமையைக் கண்டு தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஜனவரி 3 ஆம் திகதி விடுவிக்கப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
இதனிடையே பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) சந்தேகத்தின் பேரில் அந்த நபர் காவலில் எடுக்கப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளார்.
விவரங்களைச் சரிபார்த்து, தேவையான விசாரணைகளை நடத்திய பின்னர், அந்த நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், தாக்குதல் குற்றச்சாட்டுகளை அவர் திட்டவட்டமாக மறுத்து, தடுப்புக்காவலில் இருந்த காலத்தில் எந்த உடல் ரீதியான தீங்கும் ஏற்படவில்லை என்று கூறினார்.


















