கடந்த 30/12/2026 அன்று இலங்கை கடற் பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தினசரி மருந்து உட் கொள்ளும் இந்திய மீனவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி மீனவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 30ஆம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றசசாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து ஒரு மீன்பிடி படகையும் அதிலிருந்த பிரபு (49), நாகராஜ் (47), ரூபன் (45) ஆகிய மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீனவர் பிரபு மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து பாவிப்பவர் என்றும், கடந்த 3ம் திகதி மதுரையில் உளவியல் ரீதியாக சிகிச்சை பெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மீனவர் பிரபு தூக்க மாத்திரை பாவிக்காமலும், உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல் மன நலம் பாதிக்கப்பட்டவாறு இருப்பதாக உடன் இருக்கும் மீனவர்கள் தெரிவித்ததாக பிரபுவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


















