கராகஸ் மற்றும் வொஷிங்டன் இடையே 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (06) தெரிவித்தார்.
இது சீனாவிலிருந்து விநியோகங்களைத் திசைதிருப்பும் அதே வேளையில் வெனிசுலாவுக்கு எண்ணெய் உற்பத்தியில் ஆழமான குறைப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையாகும்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குத் சந்தையை திறந்துவிடவும் இல்லையெனில் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் ட்ரம்பின் கோரிக்கைக்கு வெனிசுலா அரசாங்கம் பதிலளிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான வலுவான அறிகுறியாக இந்த ஒப்பந்தம் உள்ளது.
வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு “முழுமையான அணுகலை” வழங்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ட்ரம்ப் விதித்த ஏற்றுமதி தடை காரணமாக வெனிசுலாவில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் கப்பல்களிலும் சேமிப்பு தொட்டிகளிலும் நிரப்பப்பட்டுள்ளன.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை இருந்தது.
இது கடந்த வார இறுதியில் அமெரிக்கப் படைகள் அவரைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
வெனிசுலாவின் உயர் அதிகாரிகள் மதுரோவின் கைதினை ஒரு கடத்தல் என்று கூறியுள்ளனர் – மேலும் அமெரிக்கா நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் புதிய உடன்பாடு மூலமாக வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை அனுமதிக்கப்பட்ட மசகு எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் என்று ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் செவ்வாயன்று தெரிவித்தார்.
இது குறித்து மேலும் குறிப்பிட்ட ட்ரம்ப்,
இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்த பணம் அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும், இதனால் அது வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிபடுத்தப்படும் – என்று கூறினார்.
மேலும் எண்ணெய் கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு அனுப்பப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வெனிசுலா எண்ணெயின் அளவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 1.5% க்கும் அதிகமாக சரிந்தது.
இதேவேளை, 2020 இல் வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் வெனிசுலாவின் எண்ணெயை வாங்குபவர்களில் சீனா முன்னணியில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


















