வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு இ. நாகராஜன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இலங்கை இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளும் பெரும் திருவிழாவாக முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், கடந்த வருடம் 9,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்தியாவிருந்து 4364 பக்தர்கள் உள்ளடங்கலாக 7,464 பக்தர்கள் வரை கலந்துகொண்டார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், கச்சத்தீவு மனிதர்கள் இல்லாத தனித்தீவாக இருப்பதனால் சகல ஏற்பாடுகளுடன் நடப்பாண்டு திருவிழா கடந்த ஆண்டு திருவிழா ஒழுங்கமைப்பினைக் காட்டிலும் மேலும் புனிதமாக சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும், கடந்த ஆண்டு ஏதாவது சில குறைபாடுகள் இருப்பின் அதனை இக் கலந்துரையாடலில் தெரிவித்து, அவை குறித்து அதிக கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது அமையவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், திருவிழாவுக்கு சகலரது ஒத்துழைப்பு பிரதானமானதென சுட்டிக்காட்டியத்துடன், இத் திருவிழா சிறப்புற நடைபெற அனைவரும் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இந்திய மற்றும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டுமென அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி – ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேற்படி கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பிரதானமாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான வசதிகளை மேற்கொள்ளுதல்.
2.குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4.பக்தர்களுக்கு 28 ஆம் திகதி காலை உணவு இலவசமாக வழங்குவகும் தீர்மானிக்கப்பட்டது.
5.கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில் ஒரு அம்புலன்ஸ் படகும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் 02 அம்புலன்ஸ் வண்டிகள் குறிகட்டுவானிலும் தயார் நிலையில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு படைகளின் அதிகாரி, யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














