கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா ஆண்டு தோரும் கச்சத்தீவில் நடைபெறும். இதில் இந்தியா-இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27, 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது
இந்நிலையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத் தந்தை அனுப்பிய கடிதத்துடன் வேர்கோடு பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் தலைமையில் விழா ஒருங்கிணைப்புக் குழுவினர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் காலோனை நேரில் சந்தித்து விழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினர்.
இதனிடையே இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடந்த முதல் கட்ட கூட்டத்தில் இலங்கையிலிருந்து 4 ஆயிரம் பக்தர்கள், இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ்பாணம் மீனவளத்துறை, இலங்கை கடற்படை, யாழ்பாணம் மாவட்ட செயலகம், யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஆகியோர் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் சிவகங்கை மறை மாவட்ட ஆயருக்கு அனுப்பிய கச்சத்தீவு திருவிழாவுக்கான அழைப்பிதழை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்துள்ளோம். அதன் அடிப்படையில் வரும் 13ஆம் தேதி விழா குழு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலன கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும், அதன் பின்னர் விண்ணப்பங்கள் கொடுக்கும் திகதி நபர் ஒருவருக்கு வசூலிக்கும் தொகை உள்ளிட்டவைகள் முடிவு செய்யப்படும் என வேர்கோடு பங்குத்தந்தை தாமஸ் பரிபாலன் தெரிவித்தார்.












