யாழ்ப்பாணத்தில் குளிரூட்டி வசதியின்றி விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பெக்கெட் என்பவை நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டுள்ளது.
மூளாய் பகுதியில் , அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் யோக்கட் மற்றும் பால் பெக்கட் என்பவற்றை எடுத்து சென்ற வாகனத்தினை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தினர்.
அதன் போது, வாகனத்தில் குளிரூட்டி வேலை செய்த நிலையில் , குறித்த வாகனத்தில் 613 யோக்கெட்கள் மற்றும் 61 பால் பெக்கெட் என்பவற்றை விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து அவற்றை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மீட்டதுடன் , யோக்கட் மற்றும் பால் பக்கெட் என்பவற்றை கைப்பற்றியதுடன் , அவற்றை விநியோகத்திற்காக எடுத்து சென்ற குற்றச்சாட்டில் வாகன சாரதி மற்றும் விநியோக முகாமையாளர் ஆகியோருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேளை மன்றில் சாரதி மற்றும் விநியோக முகாமையாளர் ஆகியோர் முற்பட்ட நிலையில் , அவர்கள் இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவித்த மன்று , கைப்பற்றப்பட்ட யோக்கட் மற்றும் பால் பக்கெட் என்பவற்றை அழிக்குமாறு உத்தரவிட்டது.












