மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் இத்திட்ட முன்மொழிவு தொடர்பிலான ஆரம்ப கூட்டம் வெள்ளிக்கிழமை(09) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணரெத்தின, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் லியனகே. பிரதிப் பணிப்பாளர் நாசர், உதவிப்பணிப்பாளர் ஆர்த்தி, தேசிய மக்கள் சக்தியின் நகர அபிவிருத்தி ஆலோசகர் கலாநிதி பிரேமகுமார், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு மட்டக்களப்பு மாநகரை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடினர்
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, இவ்வாண்டில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.

அவற்றுள், வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி பாலத்தைப் பாதுகாத்தல், சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல்,மட்டக்களப்பின் சத்திருக்கொண்டானில் உள்ள தடாகத்தில் மிதக்கும் குடிசைகளை உருவாக்குதல், மட்டக்களப்பின் பாலமீன்மடுவில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாடு திட்டத்தை உருவாக்குதல், கடைத்தொகுதிகள், பாராம்பரிய உணவகத் தொதிகளை அமைத்தல், கலைக்கூடங்களை அமைத்தல், ஓவியங்கள், புகைப்படத் தொகுதிகளை அமைத்தல், ஓய்வெடுக்கும் வசதிகள். தெருவிளக்குப் பொருத்துதல், மற்றும் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாத்தல், போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது மிகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகர அபிவிருத்திக்கு நகர அபிவிருத்தி அமைச்சும், ஜனாதியும் மிகுந்த ஒத்துழைப்புக்களை நல்குவதாக இதன்போது கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

















