கம்பஹாவில் கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (26) கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் அவர்களை ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதே திகதியில் அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதிவான் உத்தரவிட்டார்.
கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் உயர் பாதிரியார்களுக்கு அவர் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பாதிரியார் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
















