பிரித்தானியாவை இன்று அதிரவைக்கும் வகையில் ‘சந்திரா’ புயல் தாக்கும் என்று மெட் ஆபீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 80mph வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன், கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்பதால் நாடு முழுவதும் சுமார் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை (Flood Watch) விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் தாக்கிய ‘இன்கிரிட்’ புயலின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், இந்தப் புதிய புயல் பொதுமக்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ‘சந்திரா’ புயல் காரணமாக தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகளில் மிக அதிக பாதிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் சுமார் 20cm (8in) வரை பனிப்பொழிவு (Snowfall) இருக்கக்கூடும். பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால், சில கிராமப்புற மக்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்படும் (Cut off) அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் பத்து மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இதன் காரணமாக லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில் சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கடல் சீற்றம் காரணமாக டெவன் (Devon) மற்றும் கார்ன்வால் போன்ற கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளிர் மற்றும் புயலின் தீவிரம் காரணமாக ‘பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம்’ வடக்கு இங்கிலாந்து பகுதிகளில் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் உடல்நிலை குன்றியவர்கள் இந்தக் கடும் குளிரினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வரை இந்தப் புயல் மற்றும் மழையின் தாக்கம் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிக்கைகளைக் கவனித்துத் தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



















