சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில், இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, சாய்ந்தமருது பிரிவுக்குட்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் விரிவான சுகாதார பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் இணைந்து பங்கேற்று, விற்பனை நிலையங்களின் சுத்தம், உணவுப் பொருட்களின் தரம், காலாவதி நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தனர்.
சுகாதார விதிமுறைகளை மீறிய சில நிலையங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாவடி வீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்கேற்புடன் நுளம்பு களத்தடுப்பு பரிசோதனை நடவடிக்கையும் இடம்பெற்றது.
இதன் போது நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இத்தகைய சுகாதார மற்றும் நுளம்பு களத்தடுப்பு பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தெரிவித்தார்.
















