நடந்து வரும் டி20 உலகக் கிண்ண புறக்கணிப்பு சர்ச்சையில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் புதிய உலகளாவிய கிரிக்கெட் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து பங்களாதேஷ் நீக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் ஐசிசியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தப் பிரச்சினையின் அண்மைய முன்னேற்றமாக பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் ஐசிசியை எக்ஸ் பதிவில் கடுமையாக தாக்கியுள்ளதுடன் அவர்கள் இந்தியாவின் பணயக்கைதிகள் என்று வர்ணித்துள்ளார்.
அத்துடன், மிகவும் ஜென்டில்மேன் விளையாட்டின் உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்க ஒரு புதிய சர்வதேச கிரிக்கெட் அமைப்பு தேவை என்றும் கோரிக்கை விடுத்தார்.
2026 ஐபிஎல் போட்டிக்கான கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதை அடுத்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் டி:20 உலகக் கிண்ணத்தில் தனது போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கடைசி நேரத்தில் கோரிக்கை விடுத்தது.
இதன் விளைவாக, தொடரிலிருந்து பங்களாதேஷ் நீக்கப்பட்டு, ஸ்கொட்லாந்து அணி பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
பங்களாதேஷின் நீக்கத்துடன் பாகிஸ்தானும் தொடரிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தியது.
எனினும் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.
டி:20 உலகக் கிண்ண போட்டி அட்டவணையின்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி பெப்ரவரி 15 ஆம் திகதி என திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் போட்டிப் புறக்கணிப்பு அறிக்கையைத் தொடர்ந்து, ஐ.சி.சி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், போட்டிகளில் இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பின் நீண்டகால மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை பரிசீலிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியது.
டி20 உலகக் கிண்ணம் பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்க உள்ளது.
போட்டி ஆரம்பத்திற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் இந்தப் பிரச்சினை எவ்வாறு முடிவுக்கு வரும் என்ற கேள்வி அதிகரித்துள்ளது.

















