பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்னடத்தை விதி (Victims’ Code) குறித்த ஆலோசனையை அரசாங்கம் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்குப் பின்னர் எங்கு செல்வது என்று பல குழந்தைகளுக்குத் தெரிவதில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை பொலிஸாரை எதிர்கொண்ட மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றும், பெரும்பாலும் தங்கள் குரல் கேட்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
நீதிமன்ற அமைப்பில் இளைஞர்களுக்கு குரல் கொடுப்பதற்கான ஆலோசனையைத் தொடங்குவதற்கு முன்னதாக, இங்கிலாந்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு அமைச்சர் ஒருவர் சென்றபோது அங்கிருந்த மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்தபோதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
கிழக்கு லண்டனின் ஸ்டெப்னியில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் பாடசாலை மாணவர்கள், தங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அமைப்பின் மீதான நம்பிக்கை எவ்வாறு குறைந்தது என்பது குறித்தும் இதன்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே குற்றவியல் நீதி அமைப்பின் சிக்கல்களால் குடும்ப வன்முறைகளுக்கு பின்னர் பல இளைஞர்கள் உதவிக்கு எங்கு செல்வது என்று தெரியாமல் தவிப்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் அவர்களுக்கான புதிய விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி , 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, பெற்றோருடன் சேர்ந்து காவல்துறை மற்றும் நன்னடத்தை அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பு மேற்கொள்ளமுடியும்.
நீதித்துறை நடைமுறைகளின் போது இளைஞர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை உறுதி செய்தல்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வழக்கை விசாரணை மற்றும் அதற்குப் பிந்தைய நிலைகள் வரை கொண்டு செல்ல ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ‘உங்கள் உரிமைகளைப் புரிந்து கொள்ளுங்கள்’ (Understand Your Rights) என்ற பிரச்சாரத்தின் மூலம், பாதிக்கப்பட்டோருக்கான விதிகள் அனைவருக்கும் பொருந்தும் என்பதை உறுதி செய்தல்.
போன்ற விதிகள் பாதிக்கப்பட்டோருக்காக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
















