இலங்கை கடற்பரப்பில் இரண்டு மீனவப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் இன்று (07) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை கடற்படைக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாகவும், அதில் இந்திய கடற்படையோ அல்லது இந்திய கடலோரக் காவல்படையோ இச்சம்பவத்துடன் தொடர்புபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எவ்வாறாயினும் இது குறித்து உண்மைகளைக் கண்டறிய அமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து மேலதிகமாக கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே:
“கடந்த நாட்களில் இலங்கை கடற்பரப்பில் எமது இரண்டு மீனவப் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எமது அண்டை நாடான இந்தியாவின் கடலோரக் காவல்படையினரே இத்தாக்குதலை நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் இது குறித்து ஆராய வேண்டும். எனவே கடற்படைக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இது பற்றி விசாரிக்குமாறு கூறினோம். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்திய உயர்ஸ்தானிகர், இது இந்திய கடலோரக் காவல்படையினராலோ அல்லது இந்திய கடற்படையினராலோ மேற்கொள்ளப்பட்டதல்ல என்று மறுத்துள்ளார்.
எனினும் ஓர் அரசாங்கமாகவும், அமைச்சாகவும் நாம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எமது நாட்டு மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமக்கு அவசியமாகும். இது குறித்து ஆராய்ந்து சரியான அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது வெளிநாட்டினராலா, நம் நாட்டவர்களாலா, வேறு கும்பலா, உத்தியோகபூர்வ குழுவா அல்லது உத்தியோகபூர்வமற்ற குழுவா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதைத்தான் நாம் செய்ய வேண்டும்,”












