பேங்கர் பல்கலைக்கழகத்தின் (Bangor University) விவாதச் சங்கம், ரிஃபார்ம் யுகே கட்சியுடன் கேள்வி-பதில் அமர்வை நடத்த மறுத்த முடிவிற்கும் தமக்கும் தொடர்பில்லை என அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ரிஃபார்ம் யுகே(Reform UK.) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா போச்சின் (Sarah Pochin) மற்றும் பிரச்சாரகர் ஜாக் ஆண்டர்டன் (Jack Anderton) ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்ற விடுத்த கோரிக்கையை அந்தச் சங்கம் நிராகரித்தது.
“ரிஃபார்ம் யுகே உறுப்பினர்களால் காட்டப்படும் இனவெறி, மூன்றாம் பாலின எதிர்ப்பு (transphobia) அல்லது ஓரினச்சேர்க்கையாளர் எதிர்ப்பு (homophobia) ஆகியவற்றுக்கு எங்களிடம் துளியும் இடமில்லை” என்று அந்தச் சங்கம் குறிப்பிட்டது.
இந்நிலையில் கட்சியின் கொள்கைப்பிரிவுத் தலைவர் ஜியா யூசுப் (Zia Yusuf), ரிஃபார்ம் யுகே ஆட்சிக்கு வந்தால் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் £30 மில்லியன் நிதியை நிறுத்தப்போவதாகக் கூறினார்.
இருப்பினும், இது கட்சியின் அதிகாரப்பூர்வக் கொள்கை அல்ல என்று அக்கட்சியின் வேல்ஸ் கிளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்கலைக்கழக நிர்வாகம் இது குறித்துக் கூறுகையில், மாணவர் சங்கங்கள் சுதந்திரமாகச் செயல்படுபவை என்றும், அனைத்து அரசியல் கருத்துக்களையும் உள்ளடக்கிய விவாதங்களை தாங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்தது.
மேலும் “மாணவர் சங்கங்கள் வெளியிடும் கருத்துக்கள் அவர்களுடையது மட்டுமே எனவும் அது பல்கலைக்கழகத்தின் கொள்கையைப் பிரதிபலிக்காது,” எனவும் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















