பிரித்தானியாவில் யூத எதிர்ப்புச் சம்பவங்களைக் கண்காணிக்கும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளை (CST) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மான்செஸ்டரில் (Manchester ) நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பெருமளவான கணக்கான யூத எதிர்ப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2025-இல் 3,700 யூத எதிர்ப்பு வெறுப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இது அதறகு முந்தைய ஆண்டை (3,556) விட 4% அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு மாதமும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் திகதி (தாக்குதல் நடந்த நாள்) 40 சம்பவங்களும், அதற்கு அடுத்த நாள் 40 சம்பவங்களும் பதிவாகின.
இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவை அந்தத் தாக்குதலுக்கு நேரடியாக எதிர்வினையாற்றிய சம்பவங்களாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிரம்ப்சால் (Crumpsall) பகுதியில் உள்ள ஹீடன் பார்க் ஹீப்ரு வழிபாட்டுத் தலத்தில் (Heaton Park Hebrew Synagogue) நடந்த தாக்குதலில் மெல்வின் கிராவிட்ஸ் (Melvin Cravitz, ) மற்றும் அட்ரியன் டால்பி (Adrian Daulby, ) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான (Cravitz) கிராவிட்ஸ், ஜிகாத் அல் ஷாமி (Jihad al Shamie) என்ற பயங்கரவாதியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இதேவேளை, டால்பி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரியால் தவறுதலாக சுடப்பட்டு உயிரிழந்தார்.
கடந்த 1984-ஆம் ஆண்டு சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளை CST கண்காணிப்பைத் தொடங்கிய பின்னர் , பிரித்தானியாவில் நடந்த முதல் உயிரிழப்புடன் கூடிய யூத எதிர்ப்புப் பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.
இதன் பின்னர் அடுத்தடுத்து பல தாக்குதல் சம்பவங்களும் பாதிவாகியுள்ளன.
அரசாங்கத்தின் யூத எதிர்ப்பு விவகாரங்களுக்கான சுதந்திர ஆலோசகர் லார்ட் ஜான் மான் (Lord John Mann) கூறுகையில், “இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் அச்சமூட்டுவதாகவும், நாட்டில் நிலவும் இடைவிடாத யூத எதிர்ப்பின் தன்மையை விளக்குவதாகவும் உள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














