வேல்ஸில் இந்த ஆண்டு ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலிஸ்டிரீன் (Polystyrene) உணவுக் கொள்கலன்களுக்கு தடை விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தொடர்பான தற்போதைய விதிகளை இந்த வசந்த காலத்தில் விரிவாக்க வேல்ஸ் அரசு விரும்பியது. ஆனால், குறித்த காலத்திற்குள் இங்கிலாந்து (UK) அரசாங்கத்திடம் அனுமதி பெறுவது “சாத்தியமில்லை” என்றும் அது கூறியுள்ளது.
இந்நிலையில் இந்தத் தடையை அமல்படுத்துவதில் தாங்கள் இன்னும் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் அதற்கான புதிய திகதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வேல்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தட்டுகள், கட்லரி (cutlery), பானங்களைக் கலக்கும் குச்சிகள் மற்றும் பலூன் குச்சிகள் போன்றவற்றுக்கான தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இதேவேளை, ( Boris Johnson) போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட இங்கிலாந்து உள்நாட்டு சந்தைச் சட்டம் (UKIMA) காரணமாக, எந்தவொரு பொருளையும் தடை செய்வதற்கு முன்பு வேல்ஸ் அரசு லண்டனில் உள்ள அமைச்சர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இந்தச் சட்டத்தின்படி, இங்கிலாந்தின் ஒரு பகுதியில் விற்கப்படும் பொருள் மற்ற பகுதிகளிலும் விற்கப்பட வேண்டும்.
வேல்ஸ் நாடாளுமன்றம் ஒரு தடையை விதித்தாலும், இந்தச் சட்டம் அதைத் தடுக்கும் அதிகாரம் கொண்டது.
இந்நிலையில் வேல்ஸ் அரசு 2022-ல் இயற்றிய பிளாஸ்டிக் சட்டம், இங்கிலாந்தின் மற்ற பகுதிகளை விடக் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.
இதில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலிஸ்டிரீன் மூடிகள் போன்றவையும் அடங்கும்.
இந்நிலையில் இதுகுறித்து, “கொள்கை ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும், கருத்து வேறுபாடுகளைக் கையாளவும் இங்கிலாந்து அரசுடன் இணைந்து செயல்பட கடமைப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக, நடப்பு நாடாளுமன்றக் காலத்திற்குள் இந்தத் தடையை (Phase 2 bans) அமுல்படுத்துவது இனி சாத்தியமில்லை எனவும் கிராமப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேல்ஸ் அரசின் இணையதளம், 2026 வசந்த காலத்திற்குள் இந்தத் தடையை அமல்படுத்தும் எண்ணம் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















