பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன், புஷ்பா படங்கள் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிராண்ட் உத்தி குழுவில் பணியாற்றி இருக்கும் காவேரி பருவா என்பவர், விளம்பரங்களுக்காக அல்லு அர்ஜுனை சந்திக்க வேண்டும் என்றால் அதற்கு முன் “அவர் கண்களை நேரடியாகப் பார்க்கக் கூடாது, கைகுலுக்கக் கூடாது, அனுமதியின்றி பேசக் கூடாது, இடையில் நகரக் கூடாது” என்பது உள்பட 42 கடுமையான விதிகள் உள்ளன என்று கூறியிருந்தார். இது சர்ச்சையானது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் அல்லு அர்ஜுனை சரமாரியாக ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்நிலையில், அல்லு அர்ஜுன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அவர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அல்லு அர்ஜுன் எப்போதும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்பவர். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். இதற்குக் காரணமானவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர எங்கள் சட்டக் குழு தயாராக உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது



















