அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றதுடன் பூதவுடல் வழுகையாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுவனின் பூதவுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உறவினர்கள் பதாகைகளை தாங்கியவாறு பொலிசாருக்கு எதிரான கோசங்களை முன்வைத்திருந்தனர்.
பொலிஸாரை கைது செய்து, தமது பிள்ளைக்கு நீதியை வழங்குமாறும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.
இதேவேளை வீதியில் பூதவுடல் ஊர்வலமாக எடுத்து சென்றிருந்தபோது, வீதிப்பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து பொலிசாருடன் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. தமது பிள்ளைக்கு நீதிவழங்குமாறு கோரிய உறவுகளை பொலிசார் அங்கிருந்து அகற்றும் காட்சி பதிவாகியிருந்தது.
இதேவேளை அல்லப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் கடமையில் இருந்த ஊர்காவல்துறை பொலிஸ் உத்தியோதர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.













