அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ‘அமைதி திட்ட அமைப்பை’ உருவாக்கியுள்ளார்.
இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இதில் காசா மறுசீரமைப்பிற்காக 05 பில்லியன் டொலர் நிதி திரட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் இது குறித்துத் தெரிவிக்கையில்,
‘வத்திக்கான் என்பது பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல, அதன் தன்மை வேறுபட்டது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலைகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த அமைப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.’
ட்ரம்ப்பின் இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணையாமல், வெறும் ‘பார்வையாளர்களாக’ மட்டுமே கலந்துகொள்ள தீர்மானித்துள்ளன.
காசா விவகாரம் குறித்துப் பேசும் இந்த அமைப்பில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காசாவில் கடந்த அக்டோபர் முதல் நிலவி வரும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 72, 000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவும் கடும் பஞ்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பாப்பரசர் லியோ தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















