பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளையொட்டி, அதிகாலை நேரத்தில் மக்கள் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நோன்பு ஆரம்பிக்கும் முன் ஸஹர் உணவுக்காக பல வீடுகளில் சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.
வெடிப்பின் தாக்கம் காரணமாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் முழுமையாக இடிந்து சரிந்துள்ளது. இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கினர்.
இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவுகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















