இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழல் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.
நாம் விரும்பாத ஒரு சூழலிலும், இலங்கை ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமீபத்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு பயங்கரமான சூழலை நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக மாறியுள்ளோம் என்றும், யார் எப்போது எங்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத ஒரு ஆபத்தான நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘IRIS Dena’ கப்பல் சம்பவத்தை ஒரு முக்கிய உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இவ்வாறான திடீர் விபத்துக்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக அமைவதையும் விளக்கினார்.
இதேவேளை, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடக்கும் யுத்தத்தின் தாக்கம், ஒரே நாளில் காலி கராபிட்டிய வைத்தியசாலையைச் சடலங்களால் நிரப்புவதற்குப் போதுமானதாக இருந்ததை அவர் கவலையுடன் நினைவு கூர்ந்தார்.
பொதுமக்களின் வாழ்க்கையில் இந்த யுத்தம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், நாடு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எமக்கு ‘அயர்ன் டோம்’ (Iron Dome) போன்ற ஏவுகணை பாதுகாப்பு கவசம் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால், வரப்போகும் ஆபத்துக்களை எதிர்கொள்ள எம்மால் முடிந்தவரை தயாராவதற்கான சட்ட ரீதியான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இவ்வாறான இக்கட்டான சூழலில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபாயங்களைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் எனவும், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் எந்த நேரத்திலும் எத்தகைய பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கேட்டுக்கொண்டார்.












