டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் உயரிய கௌரவமான ‘நைட்’ (Knight) பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசு கௌரவ ‘நைட்’ பட்டத்தை அறிவித்திருந்தது.
பிரிட்டன் மன்னர் சார்லஸ் சார்பில் வழங்கப்பட்ட இந்த உயரிய விருதினை, டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் லிண்டி கேமரூன் வழங்கிக் கௌரவித்தார்.
2017-ஆம் ஆண்டு முதல் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் சந்திரசேகரன், அதற்கு முன்னதாக ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ (TCS) நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்து, சர்வதேச அளவில் அதனை முன்னிலைப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
ஏற்கனவே இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூஷண்’ மற்றும் பிரான்ஸ் நாட்டின் மிகச்சிறந்த விருதான ‘லெஜியான் டி அனோர்’ (Legion d’Honneur) ஆகியவற்றைப் பெற்றுள்ள சந்திரசேகரனுக்கு, தற்போது கிடைத்துள்ள இந்த ‘நைட்’ பட்டம் அவரது மகுடத்தில் மற்றுமொரு வைரமாக இணைந்துள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) போன்ற பிரிட்டனின் முக்கிய நிறுவனங்கள் இயங்கி வரும் சூழலில், இரு நாட்டுப் பொருளாதார உறவை மேம்படுத்தியதற்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













