விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டினர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 47 சீன நாட்டினர், இரண்டு மலேசியர்கள் மற்றும் ஒரு இந்திய நாட்டவர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் வணிக விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்து, விசா காலம் முடிந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்தனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் நாயகத்தின் அறிவுறுத்தல்களின்படி, நீர்கொழும்புப் பகுதியில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது வெலிசறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.













