இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் செனட் சபை தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
பிரான்ஸ் செனட் சபையின் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை பாராளுமன்றத்தில் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்துக் கலந்துரையாடினர்.
பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் (Ms. Vanina Paoli-Gagin) தலைமையிலான இத்தூதுக்குழுவில், பிரதித் தலைவர் டிடியர் மெரி (Mr. Didier Marie) மற்றும் செனட்டர் லோரன்ஸ் முலர் ப்ரோன் (Ms. Laurence Muller-Bronn) உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 70 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த சபாநாயகர், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தித்வா புயல் தாக்கத்தின் போது பிரான்ஸ் வழங்கிய ஆதரவிற்குச் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பிரான்ஸ் ஒரு முக்கிய சந்தையாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகளை விளக்கினார்.
அத்துடன், ‘எயார் பிரான்ஸ்’ நிறுவனத்துடனான விமான இணைப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
GSP+ வரிச் சலுகை மூலம் இலங்கைக்கு பிரான்ஸ் வழங்கி வரும் ஆதரவு பாராட்டப்பட்டதுடன், வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் (Blue Economy) ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டது.
பிரான்ஸ் தூதுக்குழுவினர் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களையும் சந்தித்தனர்.
இச்சந்திப்பிற்கு குறித்த சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான சரோஜா போல்ராஜ் மற்றும் வலினா பௌலி ககன் ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர்.
பாலின சமத்துவம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
நீர் சுத்திகரிப்புத் திட்டம், பல்கலைக்கழகங்களுடனான கல்வி ஒத்துழைப்பு மற்றும் ஆடைத் தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றில் பிரான்ஸ் கொண்டுள்ள ஆர்வத்தை தூதுக்குழுவினர் வெளிப்படுத்தினர்.
இறுதியாக, பிரான்ஸ் தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதுடன், சபாநாயகரால் வழங்கப்பட்ட கௌரவ விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்புகளில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பெர்ட் ஆகியோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


















